மாரியம்மன் கோவில் திருவிழா
புள்ளம்பாடியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
புள்ளம்பாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 13-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் தங்கள் வீடுகளில் மாவிளக்கு செய்து கோவிலுக்கு எடுத்து வந்து வழிபட்டனர். நேற்று பெரிய ஏரி கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி அக்னிசட்டி, பால்குடம், கரும்பு தொட்டில் எடுத்து ஊர்வலமாக கிராமத்தின் வடக்கு பகுதியில் உள்ள காவல்தெய்வம் குழுந்தாளம்மன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து மாரியம்மன் கோவில் வந்தடைந்தனர். அதன் பின் அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவில் பம்பை செண்டை மேளம் முழங்க பக்தர்கள் சாமி ஆட்டம் ஆடி வந்தனர். தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி அளவில் காப்பு அறுத்து விழாவை நிறைவு செய்கின்றனர்.