மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ஆம்பூர் அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
ஆம்பூரை அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி மங்கள இசை, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.
இதில் வேதமந்திரங்கள் முழங்க, யாக பூஜை நடைபெற்றன. இதனை தொடர்ந்து கலசத்தை குருக்கள் தலை மீது சுமந்தபடி மேள தாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு எடுத்துச்சென்றனர்.
சிறப்பு அழைப்பாளராக மகாதேவமலை மகானந்த சித்தர் சுவாமிகள் கலந்து கொண்டு கலசத்தின் மேல் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். பின்னர் கோவில் சன்னதியில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டு, மாரியம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மை பழனி தலைமையில் வீராங்குப்பம் கிராமவாசிகள் செய்திருந்தனர்.