மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பரதன்தாங்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
செஞ்சி:
செஞ்சியை அடுத்த பரதன்தாங்கல் கிராமத்தில் மகா சக்தி மாரியம்மன் மற்றும் கோவில் பரிவாரத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர், முருகர், தாட்சாயினி, துர்க்கை அம்மன், நவக்கிரகம், கங்கை அம்மன், காத்தவராயனுக்கு கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி காலை மங்கள இசை மற்றும் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து முதற்கால யாகசாலை பூஜையும், சுவாமிகள் கரி கோலம் வருதல், யாகசாலையில் பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. நேற்று காலை யாக சாலையில் 5-ம் கால பூஜை நடந்தது. பின்னர் யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு ராஜகோபுரம் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களின் விமானம் மீது கொண்டு செல்லப்பட்டு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவரான மகா சக்தி மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.