மாரியம்மன் கோவில் தேரோட்டம்


மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

பெரம்பலூர்

தேரோட்டம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பொன்னகரம் கிராமத்தில் விநாயகர், மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 3-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் வாண வேடிக்கையுடன் சுவாமி ஊர்வலமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது.

இதையொட்டி நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளினர். பின்னர் மதியம் 12 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரினை பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதிகளின் வழியாக தேர் சென்று மீண்டும் அதன் நிலையை வந்தடைந்தது. இதில் பொன்னகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீர் விழாவும், மாலையில் கருப்பையா, அய்யனார் சுவாமிகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடும், இரவில் மேடை நாடகமும் நடக்கிறது.

மகா மாரியம்மன் கோவில்

இதேபோல் குன்னம் அருகே பெரியம்மாபாளையம் கரம்பியம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 1-ந் தேதி சோலை முத்தையா, அய்யனார், மூப்பனார், செல்லியம்மன் சுவாமிகளுக்கு கரகம் அழைத்தல் நிகழ்ச்சியும், ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 3-ந் தேதி மாரியம்மனுக்கு சக்தி அளித்தல் நிகழ்ச்சியும், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 4-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தினமும் இரவில் சுவாமிகளின் திருவீதி உலாவும் வாண வேடிக்கையும், மண்டகப்படியும், குறவஞ்சி நாடகமும், கரகாட்டமும் நடைபெற்றது. நேற்று தேரோட்டத்தையொட்டி மகா மாரியம்மனை தேரில் எழுந்தருள செய்து, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கரம்பியும் கிராமத்தில் முக்கிய தெருக்கள் வழியாக தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். இரவில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று(செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.


Next Story