மாரியம்மன் கோவில் தேரோட்டம்


மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

பெரம்பலூர்

மங்களமேடு:

தேரோட்டம்

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த பிரம்மதேசத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி 25 அடி உயர தேரை பூக்களால் அலங்கரிக்கும் தலை அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் சாமியை தலையிலும், தோளிலும் சுமந்து வந்து தேரில் எழுந்தருள செய்தனர். இதைத்தொடர்ந்து தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் பிரம்மதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மகா சக்தி மாரியம்மன் கோவில்

இதேபோல் பெரம்பலூர் அருகே சத்திரமனை கிராமத்தில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 30-ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு நேரத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, காலையில் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற அக்னி சட்டி ஏந்தி கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மகா சக்தி மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். இதையடுத்து தேரோட்டம் தொடங்கியது. தேரினை பக்தர்கள் செண்டை மேளம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதிகளின் வழியாக வலம் வந்த தேர் மாலையில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் அம்மனுக்கு பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் மகா சக்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நிறைவு பெறுகிறது. அதனைத்தொடர்ந்து இன்று இரவு சத்திரமனை செல்லாண்டியம்மன் கோவில் தேர் திருவிழா அம்மனுக்கு காப்பு கட்டுதல், சந்தி பூஜையுடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 17-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story