குலசேகரம் போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட சென்ற வாலிபர் மர்மச்சாவு; போலீசார் தாக்கியதில் இறந்ததாக பெற்றோர் புகார்


குலசேகரம் போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட சென்ற வாலிபர் மர்மச்சாவு; போலீசார் தாக்கியதில் இறந்ததாக பெற்றோர் புகார்
x

குலசேகரம் போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். போலீசார் தாக்கியதில் அவர் இறந்ததாக பெற்றோர் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

குலசேகரம்,

குலசேகரம் போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். போலீசார் தாக்கியதில் அவர் இறந்ததாக பெற்றோர் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

டெம்போ டிரைவர்

குலசேகரம் அருகே உள்ள பொன்மனை குற்றியான் விளையைச் சேர்ந்தவர் சசிகுமார். ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி. இவருடைய மகன் அஜித் (வயது23). ஐ.டி.ஐ. படித்துவிட்டு டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள ஒருவரிடன் தகராறில் ஈடுபட்டதால் குலசேகரம் போலீசார், அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். சில நாட்கள் சிறையில் இருந்து விட்டு கடந்த 17 -ந் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி காலையில் அஜித் தனது தாயிடம் போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கைெயழுத்து போட வேண்டுமென்று கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

அன்றைய தினம் அவர் திடீரென்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் மீது புகார்

இந்த சம்பவம் அஜித்தின் உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் தாக்கியதால் அவர் இறந்ததாக அவரது பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து அஜித்தின் தந்தை சசிகுமார் மற்றும் தாய் ஷீலா ஆகியோர் நிருபர்களிடம்கூறியதாவது:-

எங்களது மகன் போலீஸ் நிலையில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட வேண்டும் என்றும், போலீசார் வாங்கி வைத்திருக்கும் தனது செல்போனை திரும்ப வாங்க வேண்டும் என்றும் கூறிவிட்டு சென்றார்.

இந்தநிலையில் போலீஸ் நிலையத்தில் போலீசார் அவனை தாக்கி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இதில் அஜித் இறந்துள்ளான். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விஷம் குடித்தது போன்று...

இந்த சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் கூறும்போது, "அஜித் சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் போலீஸ் நிலைய வாசலில் நின்று போலீசாரை அவதூறாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வாயில் இருந்து விஷம் குடித்ததை போன்று நுரை வந்து கொண்டிருந்தது. இதையடுத்து, அவரை மீட்டு ஒரு வாடகை காரை வரவழைத்து குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்" என்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் நேற்று மாைலயில் குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்புதான் வாலிபரின் சாவுக்கான காரணம் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையொழுத்து போட சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story