காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x
திருப்பூர்


சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், முக்கோணம் பகுதியில் பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதனால் குடிநீருக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால் குடிநீர் வினியோகத்தில் ஏற்படும் குளறுபடிகளால் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் உடுமலையையடுத்த முக்கோணம் பகுதியில் கடந்த 6-ந்தேதி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்த நிலையிலும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என கூறப்படுகிறது.

போக்குவரத்து பாதிப்பு

இதனையடுத்து நேற்று இரவு பொதுமக்கள் மீண்டும் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிக அளவில் வாகனங்கள் சென்று வரும் முக்கிய சாலையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால் நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதனையடுத்து பொதுமக்களுடன் போலீசார் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story