கவுந்தப்பாடி வாரச்சந்தையில் பொங்கலையொட்டி கட்டு சேவல் விற்பனை களை கட்டியது; ஒரு சேவல் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை
கவுந்தப்பாடி வாரச்சந்தையில் பொங்கலையொட்டி கட்டு சேவல் விற்பனை களை கட்டியது. ஒரு சேவல் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனையானது.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி வாரச்சந்தையில் பொங்கலையொட்டி கட்டு சேவல் விற்பனை களை கட்டியது. ஒரு சேவல் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனையானது.
கட்டு சேவல்கள்
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் தை பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது போல் ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் சேவல் சண்டை நடத்துவது வழக்கம்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஏராளமானோர் கட்டு சேவல்கள் வளர்த்து வருகிறார்கள். கருவாடு, கொண்டைக்கடலை, கம்பு, ராகி, சோளம் என ஊட்டச்சத்தான உணவுகள் கொடுப்பதுடன், நீச்சல் மற்றும் சண்டை பயிற்சிகளும் சேவல்களுக்கு கற்றுக்கொடுப்பது வழக்கம். இவ்வாறு வளர்க்கப்படும் சேவல்கள் கவுந்தப்பாடியில் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் சந்தைக்கு விற்பதற்காக கொண்டுவரப்படுகிறது.
தைப்பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால், நேற்று நடந்த சந்தைக்கு ஆயிரக்கணக்கான சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
பல இன சேவல்கள்
காகம், மயில், கீரி, வல்லூறு, பூதி, செங்கருப்பு, பொறி வெள்ளை, வெள்ளை என பல்வேறு இன சேவல்கள் விற்பனைக்கு வந்திருந்தன. சேவல்களின் செழுமையை வைத்தும், கம்பீரம் மற்றும் சுறுசுறுப்பை வைத்தும் விலை கூறினார்கள். சிலர் தாங்கள் கொண்டு வந்த சேவல்களை மற்ற சேவல்களுடன் சண்டையிட வைத்து அதன் செயல்பாட்டை காட்டி விலையை கூட்டினார்கள். ஒரு சேவல் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விலைபோனது.
நேற்று சேவல்களை வாங்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கர்நாடகா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தார்கள். கவுந்தப்பாடி சந்தையில் விற்கப்படும் சேவல்களை வாங்கி விற்றால் நல்ல லாபம் கிடைக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
ரூ.50 லட்சத்துக்கு விற்பனை
வெளி மாநில வியாபாரிகள் அதிகமாக வந்திருந்ததாலும், தைப்பொங்கல் நெருங்கியதாலும் வழக்கத்தை விட நேற்று சேவல்களின் விலை கூடியது.
வெளி மாவட்டங்களில் இருந்து கட்டு சேவல் வாங்க வந்திருந்த சிலர் அவைகளை கொண்டு செல்ல அழகான கூண்டுகள் கொண்டு வந்திருந்தார்கள். சிலர் குளிரூட்டப்பட்ட சொகுசு கார்களில் வந்திருந்தார்கள்.
நேற்று கட்டு சேவல்கள் மட்டும் ரூ.50 லட்சத்துக்கு விற்பனை ஆனது. வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் சேவல்களை கூண்டில் அடைந்து ஈரோடு சென்று ரெயில் மூலம் கொண்டு சென்றார்கள்.