பழனியில் ரூ.11¼ கோடியில் நவீன வசதிகளுடன் மார்க்கெட் கட்டிடம்; பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றம்


பழனியில் ரூ.11¼ கோடியில் நவீன வசதிகளுடன் மார்க்கெட் கட்டிடம்; பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 3 Jun 2023 2:30 AM IST (Updated: 3 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் ரூ.11¼ கோடியில் நவீன வசதிகளுடன் மார்க்கெட் கட்டிட கட்டப்பட உள்ளதால் பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.

திண்டுக்கல்

பழனி நகராட்சி கட்டுப்பாட்டின்கீழ் வ.உ.சி. பஸ்நிலையம், காந்தி மார்க்கெட் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இதில் மார்க்கெட் கட்டிடம் மற்றும் பஸ்நிலையத்தில் டவுன் பஸ்கள் நிற்கும் நடைமேடை, வணிக வளாக கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து அவற்றை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக அங்குள்ள கடைக்காரர்களுக்கு மாற்று கடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, மார்க்கெட் கடைக்காரர்களுக்கு உழவர்சந்தை அருகேயும், பஸ்நிலைய கடைக்காரர்களுக்கு பஸ்நிலையத்தின் கிழக்கு பகுதியில் உள்ள காலியிடத்திலும் தற்காலிக கடைகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு பஸ்நிலையத்தில் சேதமடைந்த கட்டிடம் இடித்தும் அகற்றும் பணி தொடங்கியது. இந்தநிலையில் மார்க்கெட் கட்டிடம் இடித்து அகற்றும் பணி தொடங்கி உள்ளது. விரைவில் கட்டிடம் இடித்து அகற்றப்பட்டவுடன் புதிய கட்டிட பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ரூ.11 கோடியே 32 லட்சத்தில் வாகன நிறுத்தம், கழிப்பறை என நவீன வசதிகளுடன் காந்தி மார்க்கெட்டுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. முதற்கட்டமாக பழைய கட்டிடம் இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. அதைத்தொடர்ந்து புதிய கட்டுமான பணிகள் தொடங்கும் என்றார்.


Next Story