காய்கறிகள் விலை உயர்வால் வெறிச்சோடிய மார்க்கெட்
காய்கறிகள் விலை உயர்வு எதிரொலியாக, வாடிக்கையாளர்கள் வராததால் திண்டுக்கல் காந்தி மார்க்கெட் வெறிச்சோடியது.
தக்காளி வாங்க தயக்கம்
வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சைவம், அசைவம் என்ற உணவு தயாரிப்பு என்றாலும் இவை முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக 'சமையல் அரசி' என்று அழைக்கப்படுகிற தக்காளியின் விலை இறங்குவதற்கு அடம் பிடித்து வருகிறது. அதன் விலையை கட்டுப்படுத்துவது என்பது குதிரைக்கொம்பாகி விட்டது. இதனால் தக்காளி பார்த்து விட்டு மக்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தக்காளியை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
திண்டுக்கல் உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கும், பச்சை மிளகாய் ரூ.100-க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும், கத்தரிக்காய் ரூ.76-க்கும் விற்கப்பட்டது.
விழிபிதுங்கும் மக்கள்
இதே காய்கறிகள் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் கூடுதலாக ரூ.10 முதல் ரூ.20 வரை விலை வைத்து விற்கப்படுகின்றன. குறிப்பாக ஒரு கிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. முன்பெல்லாம் மார்க்கெட்டுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் ரூ.100 முதல் ரூ.200 கொண்டு சென்றாலே பை நிறைய அனைத்து காய்கறிகளையும் வாங்கி விட முடியும். அந்த காய்கறிகளும் 2 அல்லது 3 நாட்களுக்கு சமையலுக்கு பயன்படும்.
ஆனால் தற்போது நிலைமை அப்படி அல்ல. ஒரு கிலோ தக்காளிக்கு மட்டுமே ரூ.100 முதல் ரூ.120 வரை விலை கொடுக்க வேண்டியது உள்ளது. இதனால் அன்றாட தேவைக்கு கூட காய்கறிகளை வாங்க முடியாமல் பொதுமக்கள் விழி பிதுங்கியுள்ளனர்.
ரேஷன் கடைகளில்...
இந்த நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று முன்தினம் முதல் ஒரு ரேஷன் கார்டுக்கு ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால் நிம்மதியடைந்த பொதுமக்கள் தக்காளியை வாங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கினர். அதேநேரம் மற்ற காய்கறிகளை வாங்குவதையும் குறைத்து விட்டனர். இதன் காரணமாக திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் நேற்று காய்கறிகளை வாங்க வாடிக்கையாளர்கள் அவ்வளவாக வரவில்லை. மார்க்கெட் பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.
வியாபாரிகள் அதிர்ச்சி
தக்காளியின் விலை அதிகரித்தாலும், அத்தியாவசிய பொருள் என்பதால் வாடிக்கையாளர்கள் நிச்சயம் வாங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் காந்தி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் ஒவ்வொருவரும் அதிக அளவில் தக்காளிகளை வாங்கி வந்து கடைகளில் நேற்று விற்பனைக்காக வைத்தனர்.
ஆனால் அவற்றை வாங்கிச்செல்ல வாடிக்கையாளர்கள் வரவில்லை. காலையில் இருந்து மாலை வரை மார்க்கெட்டில் காத்திருந்த வியாபாரிகளுக்கு மிகவும் சொற்பமான அளவிலேயே தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனையாகின. மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டத. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
--------