சந்தைக்கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம்
கூடலூரில் சந்தைக்கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கூடலூர்,
கூடலூரில் சந்தைக்கடை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவில் திருவிழா
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல்கூடலூரில் பிரசித்தி பெற்ற சந்தைக்கடை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாந்திர தேர்த்திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், 8 மணிக்கு கொடியேற்றுதல், தொடர்ந்து பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. 8-ந் தேதி காலை 6 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.
9-ந் தேதி இரவு 7 மணிக்கு அம்மனை காப்பு கட்டி கங்கை கரையில் இருந்து குடியழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 10-ந் தேதி காலை முதல் இரவு வரை விசேஷ பூஜைகள், 11-ந் தேதி மாலை 6 மணிக்கு அம்மன் கரக ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு கூடலூர் நகரில் உள்ள சக்தி விநாயகர், சக்தி முனீஸ்வரன் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
தேரோட்டம்
12-ந் தேதி விசேஷ பூஜைகளும், 13-ந் தேதி இரவு 7 மணிக்கு அம்மன் பூ கரகங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலை வந்தடைந்தது. இதேபோல் 16-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் தீச்சட்டிகள், பூங்கரங்கள் எடுத்து சென்றனர்.
திருத்தேர் கூடலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நேற்று அதிகாலையில் கோவிலை அடைந்தது. இதில் ஆதிவாசி மற்றும் கோத்தர் இன மக்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கரகோஷமிட்டவாறு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். நேற்று காலை முதல் இரவு வரை அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் விசேஷ பூஜை, இரவு 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.