கோத்தகிரியில் மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு
கோத்தகிரியில் புதிய உழவர் சந்தை அமைக்க கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளதால், மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் புதிய உழவர் சந்தை அமைக்க கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளதால், மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையடைப்பு போராட்டம்
கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள 50 கடைகளை அகற்றி விட்டு, அங்கு புதிதாக உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பேரூராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை வேளாண் வணிகத்துறைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடைகளை அகற்றினால், பாதிக்கப்படும் வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.
அந்த வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து கோத்தகிரி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தையும் மதியம் 2 மணி வரை அடைப்பது என மார்கெட் வியாபாரிகள் சங்க அவசர கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று கோத்தகிரி மார்க்கெட்டில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300 கடைகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு இருந்தன. வியாபாரிகள் கடைகளில் கருப்பு கொடிகள் ஏந்தியும், கருப்பு பட்டை அணிந்தும் கோரிக்கையை வலியுறுத்தினர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி, துணைத் தலைவர் உமாநாத் போஜன், இன்ஸ்பெக்டர் வேல்முருகன், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கருப்புக்கொடியை அகற்ற வைத்தனர். மேலும் வியாபாரிகளின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு, தங்களது கடைகளை திறந்தனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் கூறும்போது, பழைய உழவர் சந்தைக்கு மாற்றாக புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தை வேளாண் வணிகத்துறைக்கு வழங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனுமதி கோரி பேரூராட்சி ஆணையருக்கு நகல் அனுப்பப்பட்டு உள்ளது என்றார்.