கோவில்பட்டியில் மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு; தர்ணா போராட்டம்


கோவில்பட்டியில் மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு; தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாடகை பாக்கி இருப்பதாக 3 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் நேற்று பூட்டு போட்டதை கண்டித்து கோவில்பட்டியில் மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

வாடகை பாக்கி இருப்பதாக 3 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் நேற்று பூட்டு போட்டதை கண்டித்து கோவில்பட்டியில் மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடைகளுக்கு பூட்டு

கோவில்பட்டி நகரசபை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை இடமாற்றம் மற்றும் புதிய கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக வியாபாரிகள் மதுரை ஐகோர்ட்டில் தடை பெற்றதால் கட்டிட பணிகளும், தற்காலிக தினசரி சந்தை இடமாற்ற பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று நகராட்சி வருவாய் அதிகாரி தலைமையில் தினசரி சந்தையில் உள்ள 3 கடைகளுக்கு வாடகை பாக்கி இருப்பதாக பூட்டு போட்டதால் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வியாபாரிகள் போராட்டம்

இதையடுத்து அனைத்து வியாபாரிகளும் கடை அடைப்பு செய்து, சந்தை நுழைவு வாயிலில் மறியல், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமை தாங்கினார்.

நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் போராட்டம் நடத்திய வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து 3 கடைகளும் திறந்து விடப்பட்டது.

வியாபாரிகளின் பிரதான கோரிக்கையான நகராட்சி தினசரி சந்தை இடமாற்றம் மற்றும் புதிய கட்டுமானம் குறித்து அனைத்து கட்சிகள், வியாபாரிகள் சங்கங்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்டு கூட்டம் நடத்த வேண்டும். புதிய கட்டுமானம் குறித்த வரைபடம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். சந்தை இடமாற்றம் செய்யப்படும் இடத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்றனர்.

நகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து உதவி கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று கூறினார்கள். இதனை தொடர்ந்து வியாபாரிகள் போராட்த்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கலந்துகொண்டவர்கள்

போராட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின், பொருளாளர் செல்லத்துரை, நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார், தமிழ்நாடு காமராஜர் பேரவை தலைவர் நாஞ்சில் குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன் மற்றும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் காளிதாஸ், கலைச்செல்வன் உட்பட வியாபாரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story