வணிகர் தினத்தை ஒட்டி நீலகிரியில் கடைகள் அடைப்பால் மார்க்கெட் வெறிச்சோடின


தினத்தந்தி 6 May 2023 2:00 AM IST (Updated: 6 May 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

வணிகர் தினத்தை ஒட்டி நீலகிரியில் கடைகள் அடைப்பால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

வணிகர் தினத்தை ஒட்டி நீலகிரியில் கடைகள் அடைப்பால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

வணிகர் தினம்

ஆண்டுதோறும் மே 5-ந் தேதி வணிகர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வணிகர் தினத்தன்று வழக்கமாக கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்படுவது வழக்கம். அதேபோல, ஒவ்வொரு வணிகர் சங்கமும் தங்களது சங்க நிர்வாகிகளை திரட்டி மாநாடு நடத்தும். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த வருடம் வணிகர் தினத்தன்று இது எதுவுமே நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5-ந் தேதி 40-வது வணிகர் தினம் மாநாடு ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் நடந்ததால், நீலகிரி மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்க ஈரோடு சென்றனர். இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஊட்டி நகராட்சி மார்க்கெட் மற்றும் சேரிங்கிராஸ் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால், மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

துண்டு பிரசுரங்கள் வினியோகம்

இதேபோல் கோத்தகிரி, மஞ்சூர், பந்தலூர், குன்னூர், கூடலூர் மார்க்கெட் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக ஏற்கனவே பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதால் கடை அடைப்பால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தாலும் நகரில் ஆங்காங்கே மருந்து கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன.

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் ஓட்டல்கள் இல்லாததால் நேற்று சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர். திறந்திருந்த ஒரு சில கடைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. மேலும் அங்கேயும் ஒரு சிலருக்கு உணவு கிடைக்கவில்லை என்று வேறு சில கடைகளுக்கு சென்றனர்.

இதேபோல் வணிகர்கள் கடை அடைப்பால் பெரும்பாலான சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கூடலூர் பகுதியில் கடையடைப்பு

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. இதேபோல் மசினகுடி, நடுவட்டம் பகுதியிலும் வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்தனர். இதனால் அனைத்து சாலைகள் மற்றும் தெருக்களில் மக்கள் நடமாட்டம் அடியோடு குறைந்து காணப்பட்டது. ஆனால் மருந்து கடைகள், பூக்கடைகள், மதுக்கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தது. மேலும் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் இயங்கின.


Next Story