போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மர்மசாவு


போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மர்மசாவு
x

போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மர்மமான முறையில் இறந்தார். அவர் கழிவறையில் அரைஞாண் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

திருச்சி,

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று ஒரு பக்தரிடம் செல்போன் திருட முயன்றதாக ஒருவரை, கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பிடித்து, சமயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் அரியலூர் மாவட்டம் ஓரியூரை சேர்ந்த முருகானந்தம் (வயது 38) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்தில் உள்ள சிறை அறையில் போலீசார் வைத்திருந்ததாக தெரிகிறது.

அரைஞாண் கயிற்றால் தூக்குப்போட்டு...

இந்நிலையில், அவர் போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறையின் ஜன்னல் கம்பியில், தனது இடுப்பில் கட்டியிருந்த அரைஞாண் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்றதாக தெரிகிறது. ஆனால் மாலை 4 மணி வரை முருகானந்தத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் எடுத்துச் செல்லவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மண்ணச்சநல்லூர் தாசில்தார் சக்திவேல் முருகன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள், அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினர்.

அடித்ததால் சாவு?

இதையடுத்து முருகானந்தத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இடுப்பில் கட்டியிருக்கும் அரைஞாண் கயிற்றால் ஒருவர் எப்படி தூக்குப்போட்டு இறக்க முடியும் என்று சந்தேகம் எழுவதாகவும், போலீசார் அடித்ததால் தான் அவர் இறந்திருக்கக்கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.


Next Story