தென்காசி அருகே பரபரப்பு சம்பவம்:காதல் திருமணம் செய்தபெண் காரில் கடத்தல்-பெற்றோர் உள்பட 7 பேர் மீது வழக்கு


தென்காசி அருகே பரபரப்பு சம்பவம்:காதல் திருமணம் செய்தபெண் காரில் கடத்தல்-பெற்றோர் உள்பட 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை தாக்கி காரில் கடத்தியதாக பெற்றோர் உள்பட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி

தென்காசி அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை தாக்கி காரில் கடத்தியதாக பெற்றோர் உள்பட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காதல்

தென்காசி அருகே உள்ள கொட்டாக்குளம் இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் வினித் (வயது 22). சாப்ட்வேர் என்ஜினீயராக சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

அதே ஊரில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த நவீன் படேல் என்பவர் சுமார் 20 ஆண்டு காலமாக மரக்கடை நடத்தி வருகிறார்.

வினித்துக்கும், நவீன் படேலின் மகள் குருத்திகா படேலுக்கும் சுமார் 6 ஆண்டுகளாக காதல் இருந்து வந்துள்ளது. இந்த காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரியவந்துள்ளது. இதற்கு அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்ற நிலை இருந்தது.

திருமணம்

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நாகர்கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையே தனது மகளை காணவில்லை என்று நவீன் படேல் குற்றாலம் போலீசில் புகார் செய்தார்.

இந்த விவரம் தெரியவந்ததும் மணமக்கள் இருவரும் கடந்த 4-1-2023 அன்று குற்றாலம் போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆனார்கள். விசாரணையில் குருத்திகா, வினித்துடன் செல்வதாக கூறியதால் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

புகார் மனு

இதன் பிறகு கடந்த 14-1-2023 அன்று தென்காசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு இவர்கள் இருவரும் சென்ற போது அங்கு வந்த நவீன் படேல் மற்றும் அவரது மனைவி தர்மிஸ்தா படேல் ஆகியோர் பிரச்சினை செய்துள்ளனர்.

இது தொடர்பாக இருவர் மீதும் முதல்-அமைச்சருக்கு வினித் புகார் மனு அனுப்பினார். அந்த மனு மீதான விசாரணைக்காக 25-1-2023 அன்று மணமக்கள், வினித்தின் தகப்பனார் மாரியப்பன், சகோதரர் விஷால் ஆகியோர் குற்றாலம் போலீசில் ஆஜரானார்கள்.

அப்போது மாலை 7 மணிக்கு குருத்திகாவின் பெற்றோர் வருவதாக கூறியிருந்தனர்.

வழிமறித்து தாக்குதல்

இதற்கிடையே அன்று மதியம் குற்றாலத்தில் இருந்து கொட்டாக்குளத்திற்கு செல்வதற்காக வினித் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

இலஞ்சியில் சென்றபோது பின்னால் காரில் வந்த நவீன் படேல், அவரது மனைவி தர்மிஸ்தா படேல், மற்றொரு விஷால், கிருத்தி படேல், ராசு, ராஜேஷ் படேல், மைத்திரிக் ஆகியோர் வினித் சென்ற காரை இடித்து இடது பக்க கண்ணாடியை இரும்பு கம்பியால் உடைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வினித்தின் தகப்பனாருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

கடத்தல்

இதனால் உயிருக்கு பயந்து வினித் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசையில் இருக்கும் ஒரு மர மில்லின் அலுவலகத்திற்கு சென்று விட்டனர்.

அங்கு அவர்களை பின்தொடர்ந்து வந்த நவீன் படேல், வினித்தை கண்டபடி திட்டி அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டாராம்.

அவருடன் வந்த மற்ற 6 பேர் வினித் மற்றும் அவருடன் இருந்தவர்களை தாக்கி விட்டு குருத்திகாவையும் தாக்கி இழுத்துக் கொண்டு காரில் கடத்தி சென்று விட்டனர்.

கொலை மிரட்டல்

போகும்போது அவர்கள் வினித்தை பார்த்து இன்று நீ தப்பித்து விட்டாய், என்று இருந்தாலும் உன்னையும் உனது குடும்பத்தையும் கொல்லாமல் விடமாட்டோம் என கொலை மிரட்டல் விடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வினித் குற்றாலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் 147, 294பி, 324, 427, 366, 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வலைவீசி தேடி வருகிறார்கள்.

3 தனிப்படைகள்

கடத்திச் செல்லப்பட்ட குருத்திகா எங்கு உள்ளார்? என்பது தெரியவில்லை.

இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி குருத்திகா உள்பட 8 பேரையும் தேடி வருகிறார்கள்.

பெண்ணை கடத்திச் சென்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது. இது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story