வேறொரு பெண்ணை திருமணம் செய்ததாக வாலிபர் மீது பெண் புகார்


வேறொரு பெண்ணை திருமணம் செய்ததாக வாலிபர் மீது பெண் புகார்
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தன்னை திருமணம் செய்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ததாக வாலிபர் மீது பெண் புகார் அளித்ததை அடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை

தன்னை திருமணம் செய்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ததாக வாலிபர் மீது பெண் புகார் அளித்ததை அடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விவாகரத்து

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அன்னப்பன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது30). இவர் திருப்பூரில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்த போது இவருக்கும் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் நீதிமன்றத்தில் முறைப்படி வழக்கு தாக்கல் செய்து விவாகரத்து பெற்றுள்ளனர். இந்த நிலையில் மகேஸ்வரிக்கு அன்னப்பன்பேட்டை கிராமத்தை சேர்ந்த முகிலன் (23) என்பவருடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறி உள்ளது.

வலைவீச்சு

ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு முகிலன் வேறொரு பெண்ணை அழைத்து சென்று திருமணம் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து மகேஸ்வரி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்னப்பன்பேட்டை பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவில் ஒன்றில் தானும், முகிலனும் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது அவர் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை அழைத்து சென்று திருமணம் செய்து விட்டதாகவும், ஏமாற்றிய முகிலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

புகாரை பெற்ற அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா மற்றும் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகிலனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story