வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் தேசியக்கொடியுடன் சுதந்திர போராட்ட தியாகி தர்ணா
வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் தேசியக்கொடியுடன் சுதந்திர போராட்ட தியாகி தர்ணாவில் ஈடுபட்டார்.
வேடசந்தூர் மார்க்கெட் ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 100). சுதந்திர போராட்ட தியாகியான இவர், நேற்று வேடசந்தூர் தாலுகா அலுவலகத்துக்கு தேசியக்கொடியுடன் வந்தார். அப்போது அவர் தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள், கிருஷ்ணசாமியுடன் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தான் வசிக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், நான் எனது மனைவி, மகளுடன் வேடசந்தூர் மார்க்கெட் ரோட்டில், சாலையோரம் குடிசை அமைத்து வசித்து வருகிறேன். கடந்த 1996-ம் ஆண்டு வரை இதே இடத்தில் வீடு கட்டி குடியிருந்தோம். அப்போது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், இந்த இடத்தை புறம்போக்கு நிலம் என்று கூறியதுடன், எனது வீட்டை இடித்துவிட்டனர். இருப்பினும் அதே இடத்தில் குடிசை அமைத்து வசித்து வருவதால், அந்த இடத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், பட்டா கேட்கும் இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம். எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்று வாங்கி வந்தால் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கிருஷ்ணசாமியை அனுப்பி வைத்தனர்.