மருதூர் பெரியசாமி கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள் கொள்ளை


மருதூர் பெரியசாமி கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள் கொள்ளை
x

செந்துறை அருகே உள்ள மருதூர் பெரியசாமி கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரியலூர்

ஐம்பொன் சிலைகள் கொள்ளை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமத்தின் பெரிய ஏரி கரையில் பெரியசாமி கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. திருவிழாவில் சுவாமி ஊர்வலத்தின் போது பயன்படுத்துவதற்காக ஐம்பொன்னால் ஆன 2 குதிரைசிலைகள், 2 பெரியசாமி சிலைகள் உள்ளன. அவை எப்போதும், கோவிலில் வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டார்.

பின்னர் நேற்று காலை வழக்கம்போல் பூஜைக்காக பூசாரி கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலில் ஒரு குதிரையின் மீது இருந்த 2 அடி உயரம் கொண்ட சுமார் 20 கிலோ எடையுடைய பெரியசாமி சிலை கொள்ளைபோய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனே பூசாரி, கிராம நாட்டாமைகளுக்கு தகவல் தெரிவித்தார்.

விசாரணை

அதனை தொடர்ந்து கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, கேமராவில் பொருத்தப்பட்டு இருந்த மெமரி கார்டும் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர்கணேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story