மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊட்டி,
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை திரும்ப பெற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஊட்டி தாலுகா கமிட்டி சார்பில், ஊட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சுரேஷ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே, மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பி வலியுறுத்தினர். முடிவில் கிளை செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார். மேலும் ஊட்டி மின்வாரிய அலுவலகம் மூலம் கோரிக்கையை வலியுறுத்தி மின்வாரிய துறை அமைச்சருக்கு மனு அனுப்பப்பட்டது. மின் கட்டணம் உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பந்தலூர் உதவி மின் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டபொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.