மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த ஏந்தல் பஸ் நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சீதா தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட செயலாளர் சிவகுமார், ஒன்றிய செயலாளர் ராமதாஸ், நகர செயலாளர் பிரகலாதன், கமிட்டி உறுப்பினர் பலராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வம் உள்பட பலர் கலந்து கோரிக்கை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் செல்லும் தடம் எண் 215 கொண்ட பஸ் ஏந்தல் கிராமத்தில் பொதுமக்களை ஏற்றியும், இறக்கியும் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏந்தல் பகுதியில் பழுதடைந்த அனைத்து சிமெண்டு சாலைகளையும் புதிதாக அமைத்து தர வேண்டும். வேணுகோபாலபுரம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பயனடையும் வகையில் புறவழிச் சாலைக்கு மேற்கு புறம் உள்ள பழுதடைந்த சாலையை புதுப்பிக்க வேண்டும்.
50 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும்.
திருவண்ணாமலை நகரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் வாரத்திற்கு இரு தினங்கள் ஏந்தல் கிராமத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.