மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை அருகே பெரம்பூர் போலீஸ் சரகம் சேத்தூர் கிராமத்தில் உள்ள நித்தியகல்யாணி மாரியம்மன்கோவிலில் கடந்த 26-ந் தேதி தீமிதி திருவிழா நடந்தது. தீமிதி முடிந்து சாமி கும்பிட கோவிலுக்கு சென்றபோது இருசமூகத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஒரு தரப்பினர் மீது வேண்டுமென்று பொய்யாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை திரும்பப்பெறக்கோரியும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டை சந்திப்பதற்கு நேற்று மாலை சென்றுள்ளனர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்ஜீவ்குமார் கலெக்டர் அலுவலக கூட்டத்துக்கு சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலமணிநேரம் காத்திருந்தும் துணை போலீஸ் சூப்பிரண்டு வராததால் அதனை கண்டித்து நேற்று முன்தினம் இரவு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.