மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று மாசிப்பெருவிழா கொடியேற்றம்நாளை மயானக்கொள்ளை உற்சவம் நடக்கிறது
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் நாளை மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற உள்ளது.
மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரியில் உள்ள இந்து மக்களுக்கு குல தெய்வமாக இந்த அம்மன் விளங்கி வருகிறார்.
இங்கு ஆண்டுதோறும், மாசி மாதம் மகாசிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசிப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இன்று(சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
2-ம் நாளான, நாளை (ஞாயிற்றுக்கிழமை) அமாவாசை அன்று காலையில் நடைபெறும் மயானக் கொள்ளை திருவிழா உலகப்புகழ்பெற்றதாகும்.
மற்ற இடங்களில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்களில் இவ்விழா நடைபெற்றாலும் எல்லா கோவில்களுக்கும் தலைமையாக மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் விளங்கி வருகிறது. எனவே இங்கு நடைபெறும் விழா சிறப்பு பெற்றதாக இருக்கிறது.
மயானக்கொள்ளை
அதன்படி, இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து, நாளை மறுநாள், 21-ந்தேதி காலை, மாலையில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தேரோட்டம்
விழாவில் 22-ந்தேதி மாலை 4.30 மணிக்கு தீ மிதி திருவிழாவும், 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சிகர திருவிழாவான தேரோட்டம் மதியம் 1 மணிக்குமேல் நடைபெற உள்ளது. தொடர்ந்து, 10-ம் திருவிழாவான 27-ந்தேதி தீர்த்தவாரியும், இரவில் அம்மன் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.