திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா வருகிற 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மாசித்திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித்திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னர் கொடிமரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை, மற்ற கால பூஜைகள் நடக்கின்றது.
குடவருவாயில் தீபாராதனை
விழாவில் 5-ம் நாள் வருகிற 1-ந் தேதி இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.
7-ம் நாள் அதிகாலை 5 மணிக்கு உருகு சட்டசேவை, காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
பச்சை சாத்தி
8-ம் நாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
அன்று பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் நாளான 6-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருள்கிறார்கள். தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுக்கிறார்கள்.
11-ம் நாளில் தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் வலம் வருகிறார்கள்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.