மனைவி விஷம் சாப்பிட்டதால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி விஷம் சாப்பிட்டதால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
x

குடும்பத்தகராறில் மனைவி விஷம் சாப்பிட்டதால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

குடும்பத்தகராறு

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பக்காபட்டி அருகே உள்ள கட்டாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35), கொத்தனார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சரவணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், வீட்டு செலவிற்கு பணம் ஏதும் கொடுப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த ஜெயந்தி எறும்பு மருந்தை(விஷம்) சாப்பிட்டுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதையறிந்த அவரது உறவினர்கள் ஜெயந்தியை சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் தனது மனைவியை பார்த்துவிட்டு அன்று இரவு வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக சரவணன் கூறிவிட்டு மருத்துவமனையில் இருந்து சென்றுள்ளார். ஆனால் சரவணன் மீண்டும் வராததால் அவரை பல இடங்களில் அவரது உறவினர்கள் தேடி உள்ளனர். இந்தநிலையில் சரவணன் கட்டாரிப்பட்டி பகுதியில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story