நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரை கொன்ற கொத்தனார் கைது


நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரை கொன்ற கொத்தனார் கைது
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகா்கோவிலில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகா்கோவில்,

நாகா்கோவிலில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். சவாரிக்கு அழைத்துச் சென்று பணத்துக்காக தீர்த்துக்கட்டியது அம்பலமானது.

ஆட்டோ டிரைவர்

நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல் தெருவை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (வயது 54), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்து சவாரிக்கு சென்றார். ஆனால் அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி மேரிலதா நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் மறுநாள் கிறிஸ்துராஜ் ஆசாரிபள்ளம் இந்திரா நகரில் சாலையோரம் ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிறிஸ்துராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கிறிஸ்துராஜ் நேற்று முன்தினம் அதிகாலையில் பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மர்ம சாவு

இதற்கிடையே கிறிஸ்துராஜ் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக இருந்ததால் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர். ஆனால் கிறிஸ்துராஜை தாக்கியது யார்? என்பதை கண்டுபிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே கிறிஸ்துராஜின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடந்தது.

அப்போது குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யும் வரை கிறிஸ்துராஜின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உடலை உறவினர்கள் வாங்கவில்லை. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானமாகவில்லை.

கொலை வழக்காக மாற்றம்

பின்னர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். முதற்கட்டமாக கிறிஸ்துராஜ் காயங்களுடன் கிடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் அவரது செல்போன் அழைப்புகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது கிறிஸ்துராஜின் செல்போனில் இருந்து கடைசியாக வடக்கு கோணத்தை சேர்ந்த ஒரு நபருக்கு அழைப்பு சென்றது தெரிய வந்தது.

எனவே சம்பந்தப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தன்னுடைய மகன் தான் கிறிஸ்துராஜ் செல்போனில் இருந்து தன்னிடம் பேசியதாக அவர் கூறினார். இதைத் தொடர்ந்து அவருடைய மகனான அருண்குமார் (21) என்பவாிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினார்.

திடுக்கிடும் தகவல்

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது அருண்குமார் தான் சம்பவத்தன்று இரவு கிறிஸ்துராஜை சாகும் அளவுக்கு தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து அருண்குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரை கொன்றது ஏன்? என்பது குறித்து அருண்குமார் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

நான் கொத்தனாராக வேலை செய்து வருகிறேன். சம்பவத்தன்று இரவு கிறிஸ்துராஜின் ஆட்டோவில் மதுக்கடைக்கு சென்றேன். பின்னர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தபோது கிறிஸ்துராஜ் சவாரிக்கான பணத்தை கேட்டார். நான் பணத்தை கொடுத்த போது அவரது பர்சில் நிறைய பணம் இருந்ததை கவனித்தேன். அந்த பணத்தை அவரிடம் இருந்து எப்படியாவது பறிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது.

சரமாரி தாக்குதல்

எனவே திட்டமிட்டு அவரை இந்திரா நகருக்கு அழைத்து சென்றேன். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இருட்டு பகுதிக்கு சென்றதும் கிறிஸ்துராஜிடம் இருந்த பணத்தை தரும்படி கேட்டேன். ஆனால் பணம் தர மறுத்தார். இதனால் அவரை சரமாரியாக தாக்கினேன். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து மயங்கி விட்டார். அதன்பிறகு பணத்தை எடுத்துக் கொண்டேன். அதோடு அவரது செல்போனை எடுத்து என் தந்தையிடம் பேசி விட்டு தூக்கி எறிந்து விட்டேன். பின்னர் கிறிஸ்துராஜின் ஆட்டோவை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டேன். ஆனால் நான் தாக்கியதில் கிறிஸ்துராஜ் இறந்து விடுவார் என்று எதிர்பார்க்கவில்லை.

இவ்வாறு அருண்குமார் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் அருண்குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கிறிஸ்துராஜின் உடலை நேற்று மதியம் அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர்.


Next Story