குமரி மாவட்ட கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை


குமரி மாவட்ட கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நடந்தது. சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நடந்த பூஜையில் வெளிநாட்டு பக்தர்களும் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி

சுசீந்திரம்:

குமரி மாவட்ட கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நடந்தது. சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நடந்த பூஜையில் வெளிநாட்டு பக்தர்களும் பங்கேற்றனர்.

நிறை புத்தரிசி பூைஜ

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறை புத்தரிசி பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நிறை புத்தரிசி பூஜை நேற்று நடந்தது.

இதையொட்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து சுசீந்திரம் சன்னதி தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் அதிகாலை 5.30 மணிக்கு ஊர்வலமாக 4 ரத வீதிகள் வழியே சென்று தாணுமாலயசாமி கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் தாணுமாலயசாமி சன்னதியில் நெற்கதிர்கள் பூஜைக்காக வைக்கப்பட்டு நெற்கதிர்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

பக்தர்களுக்கு...

இதனை தொடர்ந்து திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சன்னதியின் முன்பும் நிறை புத்தரிசி பூஜை வழிபாடு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர் ராஜேஷ், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கோவிலுக்கு வருகை தந்த வெளிநாட்டு பக்தர்களுக்கும், உள்நாட்டு பக்தர்களுக்கும் நெற்கதிர்களை பிரசாதமாக கொடுத்தனர்.

பக்தர்கள் அந்த நெற்கதிர்களை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். அவ்வாறு நெற்கதிர்களை கொண்டு சென்றால் நெற்கதிர்கள் செழித்து வளர்வது போன்று தங்கள் வாழ்வும் செழிப்படையும் என்பது பக்தர்களின் இறை நம்பிக்கையாகும். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

பகவதி அம்மன் கோவில்

இதேபோல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை அதிகாலையில் நேற்று நடந்தது. இதனையொட்டி திருக்கோவிலுக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கன்னியாகுமரி மெயின் ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பிறகு நெற்கதிர்கள் மேளதாளம் முழங்க முக்கிய வீதி வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மூலஸ்தான மண்டபத்தில் உள்ள பகவதி அம்மன் முன் நெற்கதிர்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு பூஜை முடிந்த பிறகு நெற்கதிர்கள் அம்மனுக்கு படைக்கப்பட்டு அந்த நெற்கதிர்கள் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நடந்தது.


Next Story