ஓசூரில் மதுபோதையில் தகராறு:இரும்பு கம்பியால் தாக்கி தொழிலாளி படுகொலைநண்பருக்கு போலீஸ் வலைவீச்சு


ஓசூரில் மதுபோதையில் தகராறு:இரும்பு கம்பியால் தாக்கி தொழிலாளி படுகொலைநண்பருக்கு போலீஸ் வலைவீச்சு
x
கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் அடித்து தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொழிலாளிகள்

வேலூர் ஒட்டேரி பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது50). அதே பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (50). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டபள்ளி பகுதியில் உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான, 4 சக்கர வாகனங்களுக்கு பாடி கட்டும் பட்டறையில் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர். மேலும் இவர்கள் 2 பேரும் பட்டறையிலேயே தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் 2 பேரும் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், போதையில் 2 பேரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த புருஷோத்தமன், அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சேகரை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

வலைவீச்சு

இதையடுத்து புருஷோத்தமன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் சேகர் அலறி சத்தம் போட்டார். இதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது சம்பந்தமாக ஓசூர் அட்கோ போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த படுகொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான நண்பர் புருஷோத்தமனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story