அமோகமாக நடைபெறும் ஆன்லைன் லாட்டரி விற்பனை
கொள்ளிடம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி அமோகமாக நடைபெற்று வருகிறது. இதை தடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி அமோகமாக நடைபெற்று வருகிறது. இதை தடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் லாட்டரி விற்பனை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் சமீப காலமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதிக தொகை விழும் என்ற நம்பிக்கையில் பலர் ஆன்லைன் லாட்டரியை வாங்கி ஏமாற்றம் அடைகிறார்கள். சிலர் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை விலை கொடுத்து லாட்டரி நம்பரை வாங்கி பணத்தை இழக்கின்றனர். இதனால் பலரின் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
போலீசில் புகார்
கொள்ளிடம், புத்தூர், அரசூர், மாதானம் புதுப்பட்டினம் பகுதியில் உள்ள கோவில்களில் தெருவோர பகுதிகள், மரத்தடிகள், ரெயில் நிலைய வளாகம் என பல்வேறு இடங்களில் ஆன்லைன் லாட்டரி நம்பரை எழுதி கொடுக்க ஆட்கள் உள்ளனர். ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை ஆன்லைன் லாட்டரி விற்பனை அமோகமாக நடக்கிறது. இதில் பணம் கொடுத்து நம்பர் பெற்றவர்களுக்கு மதியத்துக்கு பிறகு முடிவு சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கொள்ளிடம் கடைத்தெரு வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் இக்பால், பொருளாளர் சரவணமுத்து மற்றும் நிர்வாகிகள் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீனிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
தடுக்க வேண்டும்
பல குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலையில் ஆன்லைன் லாட்டரியை வாங்கி தொழிலாளர்கள் பலர் தினமும் பணத்தை இழந்து வருகிறார்கள். கொள்ளிடம் பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரிகளும், இந்த ஆன்லைன் லாட்டரியை நம்பி ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
தொடர்ந்து இந்த லாட்டரி விற்பனை நடந்து வந்தால் பல வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே விதிக்கு புறம்பாக நடைபெற்று வரும் ஆன்லைன் லாட்டரி விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகாரை மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சீர்காழி துணை சூப்பிரண்டு ஆகியோரிடமும் வியாபாரிகள் அளித்துள்ளனர்.