பிரசவத்தின் போது தாய்-சேய் உயிரிழப்பு - மருத்துவர்கள் அலட்சியமா..?


பிரசவத்தின் போது தாய்-சேய் உயிரிழப்பு - மருத்துவர்கள் அலட்சியமா..?
x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசவத்திற்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட தாய், சேய் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விருதுநகர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் ராம்குமார்-அரங்கநாயகி தம்பதி. பிரசவத்திற்காக மனைவி அரங்கநாயகியை கணவர் ராம்குமார் மற்றும் உறவினர்கள் வ.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு காலை 6.10 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழந்தது.

இதனை அடுத்து தாய்க்கு உடல்நிலை மோசமாக அடைந்துள்ளது. இதனால் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், அங்கு அனுமதிக்கப்பட்ட அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனை அறிந்த அவரின் உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுது, உடலை வாங்கா மறுத்து மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவர்கள் பிரசவம் பார்க்கவில்லை, ஒரு செவிலியர் மட்டுமே பிரசவம் பார்த்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் மருத்துவமனைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்தை நடத்தினர். இதனை அடுத்து இறந்த பெண்ணின் உடலை அவர்கள் பெற்றுக் கொண்டனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.




Next Story