தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்சத்துணவு ஊழியர்கள் மடியேந்தும் போராட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்சத்துணவு ஊழியர்கள் மடியேந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் நேற்று மாலை மடியேந்தும் போராட்டம் நடத்தினர்.
மடியேந்தும் போராட்டம்
தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியரிடம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு உடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மடியேந்தும் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று மாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கான சத்துணவு ஊழியர்கள் குவிந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் சத்துணவு ஊழியர்களை போராட்டம் நடத்த அனுமதி மறுத்தனர். இதனை தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் தடையை மீறி கலெக்டர் அலுவலக வாயிலை நோக்கி சென்றனர். இதனால் போலீசாருக்கும், சத்துணவு ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கலெக்டர் அலுவலக வாசலுக்கு சென்ற சத்துணவு ஊழியர்கள் மடியேந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலந்து கொண்டவர்கள்
போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெயபாக்கியம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ஆனந்தசெல்வம், பெருமாள், அன்னம்மாள், பாஸ்கர், இணை செயலாளர்கள் மரியநேசம், மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னரசி வரவேற்று பேசினார். மாநில துணைத்தலைவர் தமிழரசன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் செல்லத்துரை கோரிக்கையை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் என்.வெங்கடேசன் நிறைவுரையாற்றினார். போராட்டத்தில் திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.