ஊட்டியில் ஆசிரியர்கள் உதவியுடன் பிளஸ்-2 கணித தேர்வு எழுதிய விவகாரம்: 34 மாணவர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிப்பு -பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு
ஊட்டியில் பிளஸ்-2 கணித தேர்வில் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதியதாக கூறப்பட்ட சம்பவத்தில் 34 மாணவர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி
ஊட்டியில் பிளஸ்-2 கணித தேர்வில் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதியதாக கூறப்பட்ட சம்பவத்தில் 34 மாணவர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கணித தேர்வில் முறைகேடு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி 3-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத நீலகிரி மாவட்டத்தில் 41 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அவற்றில் 3,525 மாணவர்கள், 3,915 மாணவிகள் என 7,440 எழுதினர் மேல்நிலைத் தேர்வுக்காக 44 முதன்மை கண்காணிப்பாளர்கள், 43 துறை அலுவலர்கள், 86 அலுவலக பணியாளர்கள், 574 அறை கண்காணிப்பாளர்கள், 14 வினாத்தாள் வழித்தட அலுவலர்கள் என 761 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். மேலும் பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் முறைகேடுகள் ஈடுபடுவது தவிர்க்க 69 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மஞ்சூர் அடுத்த சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த மார்ச் 27-ந் தேதி நடந்த கணித தேர்வில் மாணவ- மாணவிகள் ஒரு சிலருக்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி, அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலர் சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பெற்றோர்கள் முற்றுகையால் பரபரப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித தேர்வு எழுதிய 34 மாணவ- மாணவிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 34 மாணவர்களும் கணித பாடத்தில் தோல்வி அடைந்துள்ளதாக தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறுகையில்,
இந்த தேர்வில் 2 மாணவர்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் உதவினர். அவர்களை மட்டும் இந்த விஷயத்தில் கொண்டு வராமல், எல்லா மாணவர்களையும் ஒட்டுமொத்தமாக தேர்வில் தோல்வி என்று அறிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஒரு மாணவர் நீட் தேர்வு எழுதியுள்ளார் மற்றொரு மாணவர் ஜேஇஇ தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவர்கள் உள்பட மற்ற 32 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்றனர்.
4 மணி நேரம் விசாரணை
இதற்கிடையே நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனியசாமி, கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி ஆகியோர் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் நேற்று சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளிக்கு நேரில் சென்று பிளஸ்-2 தேர்வு எழுதிய 34 மாணவர்கள், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோரிடம் 4 மணி நேர விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி கூறுகையில், தேர்வு எழுதிய 34 மாணவர்கள், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர், தற்போதைய தலைமை ஆசிரியர் பல்வேறு தரப்பிடம் விசாரணை நடத்தி அதன் அறிக்கை சென்னையில் உள்ள தேர்வு துறைக்கு கொண்டு செல்லபடும். சர்ச்சைக்கு உரிய 2 மாணவர்களை தவிர மற்ற 32 மாணவர்களுக்கு கணித பாடத்தின் மதிப்பெண் வழங்குவது குறித்து தமிழக அரசு நல்ல முடிவெடுக்கும். எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார்.