வேலூர் மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்


வேலூர் மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்
x

வேலூர் மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. கோவில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

வேலூர்

மாட்டுப்பொங்கல்

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று வழக்கமான உற்சாகத்துடன் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளை நன்றாக குளிப்பாட்டி, அவைகளுக்கு புதிய மூக்கணாங்கயிறு மற்றும் அலங்கார பொருட்கள் அணிவித்து அந்தந்த ஊர்களில் உள்ள முக்கிய கோவில்களுக்கு அழைத்து வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இதைத்தொடர்ந்து கால்நடைகளுக்கு பொங்கல், பழங்கள் வழங்கி வணங்கினர். மேலும் விவசாய நிலங்களில் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.

இந்த விழாவையொட்டி வேலூர் லாங்குபஜாரில் கால்நடைகளுக்கு அணிவிக்கப்படும் மூக்கணாங்கயிறு, சலங்கை மணி, பெல்ட், அலங்கார கயிறுகள், பலூன்கள், கால்நடைகளை கட்டுவதற்கான புதிய கயிறுகள், கொம்புகளுக்கு தீட்டப்படும் வண்ணங்கள், கலர் பவுடர்கள், பலூன்கள் ஆகிய அலங்கார பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஏராளமான விவசாயிகள் மற்றும் வீடுகளில் கால்நடைகளை வளர்க்கும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளுக்கு தேவையான விதவிதமான அலங்கார பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். நகரில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த மாடுகளுக்கு பொதுமக்கள் பழங்கள் வழங்கியதை காணமுடிந்தது. இந்த விழாவையொட்டி மாவட்டத்தில் நேற்று எருதுவிடும் திருவிழா தொடங்கியது.

சிறப்பு அலங்காரம்

மேலும், சிவன் கோவில்களில் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம் நடைபெற்றது. வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்திக்கு காய்கறி, பழங்கள், முருக்கு, அதிரசம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் ஆராதனையும் நடந்தது.

தொடர்ந்து நடந்த திருவூடல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சாமி வீதிஉலா நடந்தது. விழாவில் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல பல்வேறு கோவில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.



Next Story