பெரம்பலூர் மாவட்டத்தில் மே தின ஊர்வலம்


பெரம்பலூர் மாவட்டத்தில் மே தின ஊர்வலம்
x

பெரம்பலூர் மாவட்டத்தில் மே தின ஊர்வலம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினமான மே தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சியின் தொழிற்சங்கங்கள் சார்பில் கொடியேற்றப்பட்டது. மேலும் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நேற்று இரவு பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் மே தின பொதுக்கூட்டமும் நடந்தது. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பெரம்பலூர் ரோவர் வளைவு அருகே நேற்று மாலையில் ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். அதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் இரவு மே தின பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சி.ஐ.டி.யு.வின் மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியும், புரட்சியாளர் அம்பேத்கர் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினரும் புதிய பஸ் நிலையத்தில் தொழிலாளர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர். புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வெங்கடேசபுரத்தில் இருந்து புறப்பட்ட தொழிலாளர்களின் உரிமை மீட்பு ஊர்வலம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.


Next Story