பணிக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்
ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து பஞ்சாம் மாநிலத்துக்கு பணிக்கு சென்ற ராணுவ வீரர் மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை போலீடில் புகார் செய்துள்ளார்.
ராணுவ வீரர்
ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி காலனி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் ஜெயசக்தி (வயது 26). இவர் பஞ்சாப் மாநிலம் சண்டிகார் பகுதியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த மாதம் பொங்கல் விடுமுறையில் சொந்த ஊருக்கு ஜெயசக்தி வந்திருந்தார்.
இந்த நிலையில் விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு செல்ல கடந்த 17-ந் தேதி காலை 6 மணிக்கு ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து தனியார் பஸ்சில் திருப்பத்தூர் சென்று, அங்கிருந்து பெங்களூரு சென்று விமானம் மூலம் பஞ்சாப் செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து இருந்தார்.
மாயம்
பொன்னேரியில் அவரை பஸ் ஏற்றிவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோரிடம், அன்று 11 மணிக்கு ஜெயசக்தி தான் எடுத்துச் சென்ற பேக்குகள் தொலைந்து விட்டது என போனில் தெரிவித்துள்ளார். பின்னர் மீண்டும் பெற்றோர்கள் ஜெய்சக்தியை போனில் தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் பெற்றோர்கள் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் ஜெயசக்தி பணிபுரியும் ராணுவ பிரிவு அலுவலகத்தில் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது ஜெயசக்தி பணிக்கு செல்லைவில்லை என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து தந்தை திருப்பதி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் வழக்குப் பதிவு செய்து ராணுவ வீரரை தேடி வருகிறார்.