மயானத்தை குப்பை கிடங்காக மாற்ற சமாதிகள் இடிப்பு
உடுமலை ஏரிப்பாளையத்தில் மயானத்தை குப்பை கிடங்காக மாற்ற சமாதிகள் இடிக்கப்பட்டது. இதனால் பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி நகராட்சி வாகனத்தை சிறைபிடித்தனர்
மயானத்தில் குப்பை கிடங்கு
உடுமலை நகராட்சியின் பிரதான மயானம் பொள்ளாச்சி சாலையில் செயல்பட்டு வருகிறது. உடுமலை நகராட்சி பகுதியான ஏரிப்பாளையத்தை ஒட்டி பழமையான மயானம் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த இடத்தில் உள்ள மயானத்தில் சமாதிகளும் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் உடுமலை நகராட்சி நிர்வாகம், ஏரிப்பாளையத்தை ஒட்டியுள்ள இடத்தில் உள்ள மயானத்தை குப்பை கிடங்காக மாற்றுவதற்கு திட்டமிட்டிருப்பதாகக்கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று நகராட்சி பொக்லைன் எந்திரம் அங்கு வந்தது. அங்கு மயானத்தின் முன்பகுதியில், பழுதடைந்த நிலையில் இருந்த காத்திருப்புக்கூடம் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளப்பட்டது.
சிறைபிடிப்பு
இதைத்தொடர்ந்து மயானத்தினுள் கட்டப்பட்டுள்ள சமாதிகளில் 5 சமாதிகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. அத்துடன் அந்த பகுதியில், மக்கும் குப்பைகளைக் கொட்டுவதற்காகபெரியகுழியும் தோண்டப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் அந்த பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
அவர்கள், மயானத்தை குப்பைக்கிடங்காக மாற்றினால் இந்த பகுதியில்சுற்றுச்சூழல் கெடும் என்று கூறி, மேற்கொண்டு பணிகளை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சிக்கு சொந்தமான பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர்.
உடனே டிரைவர் வாகனத்தை அந்த இடத்தில் நிறுத்தி விட்டு இறங்கிசென்றார். நகராட்சி நிர்வாகம் தரப்பில் இருந்து அதிகாரிகள் யாரும் வராதநிலையில், அங்கிருந்த பொதுமக்கள் நீண்ட நேரத்திற்கு பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.