பாதாள சாக்கடையில் மண் திட்டுகளை அகற்றும் நவீன எந்திரத்தின் சோதனை ஓட்டம்
திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்றவும், அதன் உள்ளே இருக்கும் மண் திட்டுகளை அகற்றவும் நவீன எந்திரங்கள் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பூரிலும் அதனை பயன்படுத்தும் வகையில் ஊத்துக்குளி ரோடு ஒற்றைக்கண் பாலம் அருகே நவீன எந்திரத்தின் மூலம் பாதாள சாக்கடையில் உள்ள மண் திட்டுகள் மற்றும் கழிவுகளை அகற்றும் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். மற்ற எந்திரங்கள் மூலம் மண் திட்டுகளை அகற்ற தண்ணீர் உள்ளிட்டவை தேவைப்படும். ஆனால் இந்த எந்திரத்தின் சிறப்பம்சமாக கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, மண்டு திட்டுகளை கரைத்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர் கோவிந்தராஜ், உதவி கமிஷனர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதை தொடர்ந்து 48-வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி கோபால்சாமி தலைமையில் நல்லூர் கே.என்.எஸ். கார்டன் மெயின்வீதியை சேர்ந்த பொதுமக்கள் மேயரிடம் ஒரு கோரிக்கை மனுவும், ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்திற்கான காசோலையும் கொடுத்தனர். அந்த மனுவில், தங்களது பகுதியில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், இதனை சரி செய்து சாக்கடை கால்வாய் அமைக்க நமக்கு நாமே திட்டத்தில் சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மேயர் தினேஷ்குமார் உரிய பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார