மயிலாடுதுறை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
போக்சோ வழக்கு போடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக அளித்த புகாரையடுத்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.
போக்சோ வழக்கு போடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக அளித்த புகாரையடுத்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவிட்டுள்ளார்.
தகாத உறவுக்கு...
மயிலாடுதுறை சேந்தங்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 38). திருமணமாகாத இவர், மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றியதோடு, அதே பள்ளியின் மாணவர் விடுதியையும் கூடுதல் பணியாக கவனித்து வந்தார்.இந்த நிலையில் ஆசிரியர் சீனிவாசன், 9-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவன் ஒருவரிடம் தகாத உறவுக்கு(ஓரினச்சேர்க்கைக்கு) வலியுறுத்தியுள்ளார்.
போக்சோவில் ஆசிரியர் கைது
இதனையறிந்த மாணவனின் தாயார், மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ஆசிரியர் சீனிவாசன், இதேபோல் பல மாணவர்களிடம் ஓரினசேர்க்கையில் ஈடுபட வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தினார்.
பணியிடை நீக்கம்
மேலும் அந்த பள்ளி நிர்வாகத்திடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணம் கேட்டதாகவும், பணம் தர மறுத்தால் வழக்கில் தொடர்பில்லாத நபர்களையும் இணைத்து போக்சோ வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது.இது குறித்து தஞ்சை டி.ஐ.ஜி. கயல்விழிக்கும் புகார் வந்தது. அதன் அடிப்படையில் இது தொடர்பாக ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து அந்த குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதாவை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவிட்டார்.