மயிலாடுதுறை முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் மயிலாடுதுறை முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது என்று கலெக்டர் லலிதா கூறினார்.
மயிலாடுதுறை:
சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் மயிலாடுதுறை முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது என்று கலெக்டர் லலிதா கூறினார்.
கடன் வழங்கும் நிகழ்ச்சி
மத்திய நிதிஅமைச்சகத்தின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறப்பு முத்திரை பதிக்கும் வாரம் கடந்த 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நாடு முழுவதும் நலத்திட்டங்கள் வழங்கி கொண்டாடப்படுகிறது. இந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் லலிதா தலைமையில் வங்கி மூலம் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
முன்னோடி மாவட்டம்
மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் ரூ.16 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை 500 பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-வங்கிகள் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்தில் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது. மகளிருக்கான சுய உதவிக்குழு கடன் வழங்குவதில் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு தொகையான ரூ.300 கோடியைத் தாண்டி ரூ.316.50 கோடி என்ற அளவில் இலக்கை தாண்டி முன்னோடியாக விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
500 பயனாளிகள்
நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக்குழு கடன், தொழில் கடன், வாகன கடன், கல்விக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக்கடன், தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய கடன் என பல்வேறு வகையான கடன் உதவிகளை சுமார் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.15 கோடி அளவில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கிகள் மூலம் வழங்கப்பட்டன.
இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் ஸ்ரீராம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி மற்றும் அனைத்து வங்கி மேலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.