ராஜபாளையத்தில் கிராசிங்குக்காக மயிலாடுதுறை ரெயில் நிறுத்தி வைப்பு


ராஜபாளையத்தில் கிராசிங்குக்காக மயிலாடுதுறை ரெயில் நிறுத்தி வைப்பு
x

ராஜபாளையத்தில் கிராசிங்குக்காக மயிலாடுதுறை ரெயில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வழியில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

மதுரை

ராஜபாளையத்தில் கிராசிங்குக்காக மயிலாடுதுறை ரெயில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வழியில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

40 நிமிடங்கள் நிறுத்தி வைப்பு

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு தினசரி பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.12662) மாலை 6.20 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு சங்கரன்கோவில் ரெயில் நிலையம் வந்தடைகிறது. இரவு 7.40 மணிக்கு ராஜபாளையம் ரெயில் நிலையம் வந்தடைகிறது. இதற்கிடையே, மயிலாடுதுறையில் இருந்து மதுரை வழியாக செங்கோட்டை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக தினமும் சுமார் 40 நிமிடம் ராஜபாளையம் ரெயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது.

அதாவது, மயிலாடுதுறையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் (வ.எண்.16847) மதுரை ரெயில் நிலையத்துக்கு மாலை 5.10 மணிக்கும், விருதுநகர் ரெயில் நிலையத்துக்கு மாலை 6.10 மணிக்கும் சென்றடைகிறது. இந்த ரெயில் இரவு 7 மணிக்கு ராஜபாளையம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. ஆனால், பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் ராஜபாளையம் ரெயில் நிலையம் வரும்வரை கிராசிங்குக்காக மயிலாடுதுறையில் இருந்து வரும் ரெயில் காத்திருக்க வேண்டியுள்ளது.

ஒற்றை ரெயில்பாதை

இது குறித்து, மதுரை கோட்ட அதிகாரிகள் கூறும்போது, ராஜபாளையம்-சங்கரன்கோவில் இடையே 33 கி.மீ. தூரம் உள்ளது. இதற்கு இடையில் இந்த ரெயில் பாதையில் வேறு ரெயில் நிலையம் கிடையாது. மேலும், பொதிகை எக்ஸ்பிரசுக்கு அடுத்து தென்காசியில் இருந்தும், மயிலாடுதுறை ரெயிலுக்கு அடுத்து விருதுநகரில் இருந்து எந்த ரெயிலும் கிடையாது. ஒற்றை ரெயில் பாதையாக இருப்பதால் பொதிகை எக்ஸ்பிரஸ் ராஜபாளையத்தை கடந்து செல்லும் வரை மயிலாடுதுறையில் இருந்து வரும் ரெயில் அங்கே நிற்பதை தவிர வேறு வழியில்லை. அந்த பாதையில் ரெயில்கள் அதிகம் இயக்கப்படும் போது மட்டுமே நேர மாற்றம் சாத்தியப்படும். அதுவரை, பயணிகள் பொறுமையுடன் இருக்க வேண்டும். மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியாத ரெயில் பாதையில், இந்த பிரச்சினை வழக்கமான ஒன்று என்கின்றனர்.


Related Tags :
Next Story