பலத்த மழையால் வேரோடு சாய்ந்த 23 மரங்கள்- அகற்றும் பணியை மேயர் இந்திராணி பார்வையிட்டார்
பலத்த மழையால் வேரோடு சாய்ந்த 23 மரங்கள் அகற்றும் பணியை மேயர் இந்திராணி பார்வையிட்டார்
கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. மதுரையிலும் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு சூறாவளி காற்றுடன் நகரின் பல இடங்களில் பலத்த மழை பெய்ததது. குறிப்பாக தல்லாகுளம், மாட்டுத்தாவணி, தமுக்கம், கோரிப்பாளையம், ஆரப்பாளையம், திருப்பரங்குன்றம், அரசரடி, திருநகர், வில்லாபுரம் உள்ளிட்ட மாநகரில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்ததது. அதனால் அந்த பகுதிகளில் இருந்த பழமையான 23 மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதனால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. உடனடியாக களத்தில் இறங்கிய மாநகராட்சி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் அந்த மரங்களை அப்புறப்படுத்தினர். நேற்று ஜெயில் ரோட்டில் மரங்கள் அகற்றும் பணியினை மேயர் இந்திராணி, கமிஷனர் பிரவீன்குமார் பார்வை யிட்டனர். அப்போது அவர்கள் மழை காலம் என்பதால் அதிகாரிகள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், மரங்களை போர்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இந்த ஆய்வின் போது தலைமைப் பொறியாளர் ரூபன் சுரேஷ், நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி கமிஷனர் மனோகரன், உதவி செயற் பொறியாளர் சேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.