வர்த்தக மைய கட்டிடத்தை மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு


வர்த்தக மைய கட்டிடத்தை மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு
x

நெல்லை மாநகராட்சி முன்பு கட்டப்பட்ட வர்த்தக மைய கட்டிடத்தை மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.56 கோடியே 71 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வர்த்தக மையக் கட்டிடத்தையும், 3 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்ட குளிரூட்டப்பட்ட அரங்கம் அதாவது விரைவில் கலைஞர் அரங்கம் என பெயர் சூட்டப்பட உள்ள அந்த அரங்கத்தையும், கா.சு.பிள்ளை பெயர் சூட்டப்பட உள்ள 2 ஆயிரத்து 500 பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள அரங்கத்தினையும், 4 சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், உணவுக்கூடம் என கட்டி முடிக்கப்பட்ட பணிகளை மேயர் பி.எம்.சரவணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவுகளை கூறும் வகையில் அவருடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வர்த்தக மையத்தின் உள்ளே அமைய உள்ள கலைஞர் அரங்கத்தின் முன்பாக பேனா நினைவுச்சின்னம் வைப்பது சம்பந்தமாக கடந்த மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேயர் பி.எம்.சரவணன், பேனா நினைவு சின்னம் அமைக்கும் இடத்தினை ஆய்வு மேற்கொண்டு தேர்வு செய்தார். பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் பணியினை உடனடியாக ஆரம்பித்து விரைவில் பணியை முடிக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி துணை ஆணையாளர் தாணுமலை மூர்த்தி, கவுன்சிலர்கள் வில்சன் மணித்துரை, பவுல்ராஜ், சுந்தர், நித்திய பாலையா, செயற்பொறியாளர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story