மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு
சேலம் அம்மாபேட்டை பகுதியில் மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சேலம் மாநகராட்சி 39-வது வார்டு பெரிய கிணறு தெருப்பகுதியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மின்மோட்டார் பொருத்தும் பணியை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்களிடம் குறைகள் கேட்டனர். அப்போது சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சலவையாளர் துறைக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது மழையால் இடிந்து சேதமான காம்பவுண்டு சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சலவை தொழிலாளர்களிடம் கூறினர். ஆய்வின்போது அம்மாப்பேட்டை மண்டல குழுத்தலைவர் தனசேகர், மாநகர பொறியாளர் ரவி, உதவி ஆணையாளர் கதிரேசன், உதவி செயற்பொறியாளர் சுமதி, கவுன்சிலர்கள் ஜெயந்தி, பச்சையம்மாள், திருஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.