வணிக வளாகத்தில் மேயர் சண்.ராமநாதன் ஆய்வு
தஞ்சையில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தஞ்சாவூர்:
தஞ்சையில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வணிக வளாகம்
தஞ்சை மாநகராட்சி சார்பில் ஜூபிடர் தியேட்டர் அருகே அண்ணாசாலை வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. ரூ.3 கோடி செலவில்9 ஆயிரத்து 432 சதுர அடி பரப்பளவில் இந்த வணிக வளாகம் கீழ்தளம் மற்றும் மேல்தளம் என கட்டப்பட்டுள்ளது. இதில் கீழ்தளத்தில் 17 கடைகளும் மேல்தளத்தில் 26 கடைகளும் என மொத்தம் 43 கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடைகளும் 160 சதுர அடி பரப்பளவு கொண்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கடைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27-ந்தேதி தஞ்சையில் நடந்த விழாவில் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்த நிலையில் முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட வணிக வளாகத்தில் உள்ள கடைகள் பொதுஏலமிடப்பட உள்ளது.
மேயர் சண்.ராமநாதன் ஆய்வு
இதையடுத்து இந்த கடைகள் ஏலமிட உகந்ததாக உள்ளதா? என மேயர் சண்.ராமநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரைதளம் மற்றும் மேல்தளத்தில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு கடைகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மண்டலக்குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஆனந்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், அண்ணாசாலை வணிக வளாகம் ரூ.3 கோடியில் கட்டப்பட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கடைகள் பொதுஏலம் வருகிற 17-ந்தேதி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது என்றார்.