புதிய இணைப்பு சாலை அமைக்க மேயர் சரவணன் ஆய்வு
நெல்லை ரெட்டியார்பட்டி மலைப்பாதையுடன் புதிய இணைப்பு சாலை அமைக்க மேயர் சரவணன் ஆய்வு செய்தார்.
நெல்லை ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் 4 வழிச்சாலை அருகில் தமிழக அரசு சார்பில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. மேலும் அங்கு கலைஞர் நூலகம் உள்பட பல்வேறு சிறப்பம்சங்களும் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அரசு சார்பில் ஆயத்த பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாநகராட்சியில் கடந்த 30-ந்தேதி நடந்த மாமன்ற கூட்டத்தில் ரெட்டியார்பட்டி மலை 4 வழிச்சாலையில் இருந்து புஷ்பலதா பள்ளி பின்புறம் வழியாக சாராள் தக்கர் கல்லூரி வரையிலும் பொதுமக்கள் எளிதாக சென்று வர வசதியாக புதிய சாலை அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று ரெட்டியார்பட்டி மலையில் உள்ள தேசிய 4 வழிச்சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பகுதிக்கு சென்றனர். அங்கு புதிதாக மாநகராட்சி சார்பில் சாலை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு 4 வழிச்சாலையில் இருந்து சாராள் தக்கர் மகளிர் கல்லூரி வரையிலும் பொதுமக்கள் எளிதாக சென்று வருவதற்கு வசதியாக 18 மீட்டர் அகலத்தில் 770 மீட்டர் நீளத்துக்கு புதிய சாலை அமைக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
ஆய்வின் போது கவுன்சிலர்கள் சுந்தர், நித்தியபாலையா, கருப்பசாமி, வில்சன் மணித்துரை, மேலப்பாளையம் உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா, உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.