தச்சநல்லூர் பகுதியில் மேயர் சரவணன் ஆய்வு


தச்சநல்லூர் பகுதியில் மேயர் சரவணன் ஆய்வு
x

நெல்லை தச்சநல்லூர் மண்டல பகுதியில் மேயர் பி.எம்.சரவணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் மண்டல பகுதியில் மேயர் பி.எம்.சரவணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

மேயர் ஆய்வு

நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட 3-வது வார்டு பகுதிகளில் மேயர் பி.எம்.சரவணன் நேற்று ஆய்வு செய்தார். அவர் தெற்கு பாலபாக்யாநகர், பூங்கா ரோடு, 6, 8, 9, 10-வது குறுக்கு தெரு, வடக்கு பாலபாக்யாநகரில் சர்வீஸ் ரோடு ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் செல்விஅம்மன் கோவில் தெருவில் அந்த பகுதி மக்கள் மேயரிடம் மனு கொடுத்தனர். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து கிழக்கு மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் கோவில் மற்றும் தாமிரபரணி நதிக்கரையை அழகுப்படுத்திடும் வகையில் அந்த பகுதியை பார்வையிட்டார். சேந்திமங்கலம் பகுதியில் சிதலமடைந்த ரேஷன் கடை மற்றும் போர்வெல் பம்பு, தெருவிளக்கு, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர் ரேவதிபிரபு, கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன், உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மருத்துவக்கழிவுகள்

மேயர் பி.எம்.சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை சாந்திநகர், நெல்லை சந்திப்பு பகுதிகளில் மருத்துவக்கழிவு கொட்டப்பட்டதாக தகவல்கள் வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் இப்படி கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள் பொதுமக்களுக்கு நோய்கள் பரவ காரணமாகி விடும். எனவே இனிவரும் காலங்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தப்படாத, காலாவதியான மருத்துவக்கழிவுகளை கொட்டினால் அதுகுறித்து உரிய விசாரணை செய்து அந்த செயலில் ஈடுபட்ட மருத்துவமனை அல்லது கிளினிக்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் மருத்துவ சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இவ்வாறு மருத்துவக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் நபர் குறித்தோ அல்லது நிறுவனம் குறித்தோ மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் பெயர் வெளியிடப்படாமல் உரிய சன்மானம் வழங்கப்படும்' என்று தெரிவித்து உள்ளார்.

குறைதீர்க்கும் கூட்டம்

தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற்பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மாநகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட தச்சநல்லூர் கரையிருப்பு பசும்பொன்நகர் பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், எங்களது பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுமார் 25 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

அடிப்படை வசதிகள்

மாநகராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் அளித்த மனுவில், பாளையங்கோட்டை ரஹ்மத்நகர் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்று வருகிறது என்று கூறி இருந்தார்.

மேலப்பாளையம் மண்டலம் 41-வது வார்டுக்கு உட்பட்ட இந்திராநகர், சோனியாநகர், காருண்யாநகர் உள்ளடக்கிய மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் அளித்த மனுவில், காருண்யாநகர்-பொன்விழா நகர் இணைப்பு சாலை, புதிதாக தெருவிளக்கு, வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மாநகராட்சி அலுவலர்கள்

தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பிலிப் அந்தோணி, செயலாளர் சாகுல் அமீது, பொருளாளர் விஜயலட்சுமி, பொதுச்செயலாளர் சீதாராமன், சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் மாநகராட்சியில் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், தமிழக அரசின் அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும். 20 மாநகராட்சிகளில் உள்ள 35 ஆயிரம் காலிப்பணியிடங்களை 3,417 பணியிடங்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து வருகிற 18-ந்தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது என்று கூறியுள்ளனர்.


Next Story