கடலூர் துறைமுகம் அருகேமாநகராட்சி பள்ளியில் மேயர் திடீர் ஆய்வு :தாமதமாக வந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
கடலூர் துறைமுகம் அருகே மாநகராட்சி பள்ளியில் மேயர் திடீர் ஆய்வு செய்தாா். அப்போது தாமதமாக வந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகம் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு நேற்று காலை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு காலை உணவு திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உரிய நேரத்திற்கு வராமல், காலதாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த மேயர் சுந்தரி ராஜா, இதுபோன்று தாமதமாக வந்தால், எவ்வாறு பணிகள் நடைபெறும், எப்படி மாணவர்களின் நலனை காக்க முடியும் என்று கேட்டார். என்னுடன் வந்து மற்ற மாநகராட்சி பள்ளிகள் எவ்வாறு செயல்படுகிறது என்று பாருங்கள் என்று அவரிடம் சுந்தரி ராஜா கூறினார்.
மேலும், அங்கிருந்த மாநகராட்சி ஆணையர் காந்திராஜியிடம், தாமதமாக வந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பரிந்துரை செய்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறது நேரம் பரபரப்பு நிலவியது.