நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றிய மேயர்
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சரவணன் தேசியக்கொடி ஏற்றினார்.
நெல்லை மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று காலையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சி துணை மேயர் ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்ததி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் லட்சுமணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு மேயர் சரவணன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
விழாவில் குழந்தை இயேசு பள்ளி மாணவிகளின் இசை வாத்தியம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதன்பின்னர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் பேட்டரி மூலம் இயங்கும் 10 வாகனங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ரேவதி பிரபு, மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் மண்டல அலுவலகங்களிலும் தேசிய கொடியேற்றப்பட்டு குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.