காலிமனைகளை தூய்மையாக பராமரிக்காவிட்டால் நடவடிக்கை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் எச்சரிக்கை
மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் தனியாருக்கு சொந்தமான காலிமனைகளை தூய்மையாக பராமரிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் தனியாருக்கு சொந்தமான காலிமனைகளை தூய்மையாக பராமரிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநகராட்சி கூட்டம்
திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் நேற்று காலை மாநகராட்சி மைய அலுவலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். நகரபொறியாளர் (பொறுப்பு) சிவபாதம் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் மேயர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. கூட்டம் தொடங்கியதும், கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக எழுந்து தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாலங்கள், ரேஷன்கடை சுவர்களில் சுதந்திரதினத்தை போற்றும் வகையில் சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்களை வரைந்து அழகுபெற செய்ய வேண்டும் என பெண் கவுன்சிலர் ஒருவர் வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்து மேயர் பேசுகையில், அனைத்து பாலங்களின் கீழ் பகுதியில் வண்ணமயமான ஓவியங்களை வரைந்து புதுப்பொழிவுபெற செய்ய வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி பீமநகர், தென்னூர் பாலங்களில் இந்த பணிகள் நடைபெற இருக்கிறது. இதேபோல் மன்னார்புரம், டி.வி.எஸ்.டோல்கேட் மேம்பாலங்களின் கீழ் மத்திய அரசின் நிதியில் அழகுப்படுத்தும் பணி நடைபெற உள்ளது என்றார்.
ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும்
34-வது வார்டுக்குட்பட்ட திருச்சி காஜாப்பேட்டை மெயின்ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் பஸ்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. ஆகவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கிலியாண்டபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே சங்கிலியாண்டபுரம் மெயின்ரோட்டை ஒருவழிப்பாதையாகவும், மணல்வாரித்துறை சாலையை மற்றொரு வழிப்பாதையாகவும் மாற்ற வேண்டும்.
ஒரு சில கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் அதிகப்படியான குப்பைகள் சேருவதால் குப்பைகளை அப்புறப்படுத்த பேட்டரி வாகனங்கள் கூடுதலாக வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு மேயர் பதில் அளித்து பேசும்போது, பேட்டரி வாகனங்களில் ஜி.பி.எஸ்.கருவி விரைவில் பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் அந்த வாகனம் எங்கு பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும், புதிதாக வாகனங்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது என்றார்.
காலிமனைகள்
தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் உள்ள காலி மனைகளில் குப்பைகள் தேங்கி, முட்செடிகள் மண்டி கிடக்கிறது. ஆகவே இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதற்கு மேயர் கூறும்போது, மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் உள்ள காலி மனைகளில் சுகாதாரமற்ற முறையில் குப்பைகள் தேங்கியோ, மழைநீர் தேங்கியோ இருந்தால் சம்பந்தப்பட்ட மனைகளின் முன்பு அறிவிப்பு பதாகை வைக்கப்படும். அதன்பிறகு 15 நாட்களுக்குள் தூய்மைப்படுத்தி கொள்ளாவிட்டால் அந்த நிலத்தை கையகப்படுத்துவதோடு, கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுவிடும். ஆகவே காலிமனைகளை தூய்மையாக பராமரித்து கொள்ள வேண்டும் என்றார்.
51-வது வார்டுக்குட்பட்ட பீமநகர் ஹீபர்ரோட்டில் உள்ள குறுகலான சாலையில் தரைக்கடைகள் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்படுகிறது. ஆகவே அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் அந்த வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தும் இயக்க வேண்டும் என்றனர்.
பூங்காக்கள்
17-வது வார்டுக்குட்பட்ட வேதாந்திரி நகரில் ஏராளமான காலிமனைகள் உள்ளன. அங்கு மாநகராட்சிக்கு சொந்தமாக ஒரே இடத்தில் 5 பூங்காக்கள் அருகருகே உள்ளன. இதில் ஒரு சில பூங்காக்கள் ஆக்கிரமிப்பிலும் உள்ளது. இந்த பூங்காக்கள் பராமரிக்க முடியாமலும் உள்ளது. ஆகவே தேவையற்ற இடங்களில் உள்ள பூங்காக்களை அகற்றிவிட்டு அங்கு மாநகராட்சிக்கு வருவாய் வரக்கூடிய வகையில் வணிக வளாகமோ அல்லது மாற்று திட்டங்களையோ செயல்படுத்த வேண்டும் என்றனர்.
இதேபோல் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிநீர் கலங்கலாக வருவதை சரி செய்ய வேண்டும். வார்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள 90 வாட்ஸ் திறன் கொண்ட பல்புகளை கூடுதலாக வழங்க வேண்டும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே சாக்கடைகள் மற்றும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினார்கள்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் கவுன்சிலர்கள் சிலர் ஒரே கலரில் சீருடைபோல் சேலை அணிந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.