ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டம் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவிப்பு
ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டத்தில் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவித்தார். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டத்தில் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவித்தார். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
அவசர கூட்டம்
ஈரோடு மாநகராட்சியின் மாமன்ற அவசர கூட்டம் நேற்று பகல் 12 மணிக்கு ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், துணை மேயர் வி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் 42 தீர்மானங்கள் விவாதத்துக்கு வந்தன. ஓரிரு தீர்மானங்கள் குறித்து கவுன்சிலர்கள் கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு மேயர், ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பின்னர் 42 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக மேயர் சு.நாகரத்தினம் அறிவித்தார்.
இதற்கிடையே 3-ம் மண்டலத்தில் இயங்கும் மாநகராட்சி வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கவுன்சிலர் கோகிலவாணி மணிராசு பேசினார். அவருக்கு கவுன்சிலர் அ.செல்லப்பொன்னி உள்ளிட்டோர் ஆதரவு அளித்தனர். ஆனால், அந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
முக்கியத்துவம்
கூட்டத்தில் 1-ம் மண்டல தலைவர் ப.க.பழனிச்சாமி பேசும்போது, 'மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும். சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்ட் அடிக்க கோரிக்கை வைத்தும் இன்னும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனது வார்டுக்கு உள்பட்ட பகுதிகளில் சொந்த செலவில் வேகத்தடைகளுக்கு பெயிண்ட் அடிக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறேன். மாநகராட்சி மன்ற அலுவலகத்தில் தந்தை பெரியார் புகைப்படம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஈரோடு மாநகராட்சியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். வரைபடம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அபராத தொகையுடன் வரி பெறப்படுகிறது. இது ஆண்டுதோறும் அபராதமாக உள்ளது. இந்த நிலை மாற்றப்பட்டு, ஒரே முறை மட்டும் அபராதம் செலுத்தியபின்னர், அடுத்தடுத்த ஆண்டுகள் அபராதம் இல்லாத நிலை கொண்டுவரப்பட வேண்டும்' என்றார்.
36-வது வார்டு கவுன்சிலர் பேசும்போது, 'கனி மார்க்கெட்டில் தற்காலிக கடைகள் அமைக்க அனுமதிக்க கூடாது. வ.உ.சி.பூங்கா காய்கறி மார்க்கெட்டில் தண்ணீர் தேங்காத வகையில் தளம் அமைக்க வேண்டும். 36-வது வார்டு முழுவதும் சாலைகளில் குண்டும்-குழியுமாக இருப்பதை தடுக்க தற்காலிக 'பேட்ச்' வேலை செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களை அதிகாரிகள் மரியாதையுடன் நடத்த வேண்டும்' என்றார்.
பாலித்தீன்
கவுன்சிலர் ஏ.ஆர்.ஜெகதீசன் பேசும்போது, 'சங்குநகர் சாலை செப்பனிடும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றார். கவுன்சிலர் தங்கமுத்து பேசும்போது, தெருவிளக்குகள் இல்லாத இடங்களில் உடனடியாக விளக்குகள் அமைக்க வேண்டும்' என்றார்.
தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசும்போது, 'ஈரோடு மாநகரில் பாலித்தீன் பை உற்பத்தி தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அதிகாரிகள் வேண்டும் என்றே நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். அடுத்த கூட்டத்துக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநகர் மன்ற கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும். தெருநாய் தொல்லையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்' என்று பேசினார்கள்.
மின் விளக்குகள்
ஈரோடு மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனத்தினர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை செய்யும் தனியார் நிறுவனத்தினர் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை. மக்கள் பிரநிதிகளான கவுன்சிலர்களின் கோரிக்கைகளையும் மதிப்பதில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் கவுன்சிலர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. இது வேண்டும் என்றே செய்யப்படுவதாக உள்ளது. எனவே இதுபற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட மக்கள் கோரிக்கைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் முக்கியத்துவம் அளித்து பணி செய்ய வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் பேசினார்கள்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் பதில் அளித்தனர். ஈரோடு மாநகராட்சிக்காக விரைவில் ரூ.16 கோடியே 94 லட்சத்தில் மின் விளக்குகள் வாங்கப்பட உள்ளன. எனவே விரைவில் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் பொருத்தப்படும். அதிகாரிகள் கவுன்சிலர்களின் ஆலோசனைகளை கேட்டு அந்தந்த வார்டுகளில் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்கள்.
கூட்டத்தில் முன்னாள் கவுன்சிலர் காவிரி செல்வனின் மனைவியும், தற்போதைய கவுன்சிலரான ஹேமலதாவின் தாயாருமான புஷ்பா மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த புஷ்பா, பி.பி. அக்ரகாரம் பேரூராட்சியின் கவுன்சிலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் மாநகராட்சி பொறியாளர் ஆ.மதுரம், செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையாளர்கள் சண்முகவடிவு, விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.